ஏன் இப்படி ?
எதற்காக காதல் வலிகளைப் பற்றியே
கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் ?
அவள் வருவதற்கு முன்பிருந்தே
இவ்வுலகை ரசித்தேனே ?
பிறகேன் இப்படி ?
என் உலகம் இருட்டாக்கப்பட்டாலும்,
அவள் நினைவுகள்
என்னை கவிதை எழுத தூண்டுகின்றனவா ?
உனக்கு மாற்றம் வேண்டும்....
அவள் கொடுத்து விட்டுப்போன வலிகளை
மறக்கத் துவங்கு....
தொலைத்துவிட்ட வழியைத் தேடு ....
ஆயிரமாயிரம் உறுதிகள்
எனக்கு நானே
கூறிக் கொண்டே தனிமையில்
தோட்டங்களில் உலவிச்சென்றேன்,
அவள் நினைவுகள் தூரமாயின.
சில
பூக்களும்
என்னை வாழ்த்த விழைந்தன
தற்செயலாய்
அவர்களை கடந்தபோது கவனித்தேன்,
என் வலிகளை உணர்த்த ,
கைகள் எங்கும் முட்களை ஏந்திக்கொண்டிருந்தனர்,
அவள் நினைவுகளை
விட்டுப் பயணிக்க முயன்ற
என்னைப் பற்றி, ஏளனமாய்,
ஒன்றோடொன்று முகம் உரசி,
ரகசியம் பேசிக்கொண்டிருந்தன,
எனக்காக
அவள் ,
என்றோ பரிசளித்த ரோஜாச் செடிகள்.